Others

பயத் தாக்குதல்கள்

பயத் தாக்குதல்களை எப்படி அணுகவேண்டும்?

டாக்டர் ஷ்யாமளா வட்ஸா

பல நேரங்களில், அச்சத் தாக்குதலின் பயமுறுத்தும் அறிகுறிகளுடன் மக்கள் மருத்துவமனைகளின் நெருக்கடிச் சிகிச்சை அறைகளுக்கு வருகிறார்கள்: தீவிர பயம், வேகமாகத் துடிக்கும் இதயம், மூச்சிறைத்தல் அல்லது மூச்சடைப்பு, வேகமாக வியர்த்தல், வயிற்றுப்பகுதியில் அசௌகர்யம், இவற்றுடன், தங்களுக்கு இதய அதிர்ச்சி வந்துவிட்டது, அல்லது "கிறுக்குப் பிடித்துவிட்டது" என்ற உறுதியான பயம். இந்தத் தாக்குதல்கள் பொதுவாக 10 நிமிடங்கள்கூட நீடிக்காது.

முதலில், அவர்களுக்கு இதய அதிர்ச்சி வந்திருக்கச் சாத்தியம் உண்டா என்பதை ஆராயவேண்டும், அதுதொடர்பான ஆய்வுகளை நிகழ்த்தி நெருக்கடிநேர நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இதேபோல் தோன்றக்கூடிய பிற மருத்துவ நிலைகளையும் ஆராயவேண்டும், அந்தப் பிரச்னைகள் எவையும் அவருக்கு இல்லை என்பதை ஒரு மருத்துவர் உறுதிசெய்யவேண்டும், அதன்பிறகுதான் அவரை மனநல நிபுணரிடம் அனுப்பவேண்டும்.

1999ல் நான் அமித்தை முதன்முறையாகச் சந்தித்தபோது, அவருக்கு வயது 29தான். ஆனால் அதற்குள் சில இதயச்சிகிச்சை நிபுணர்கள், பல மனநல நிபுணர்களை அவர் சந்தித்திருந்தார். சுமார் ஐந்து ஆண்டுகளாக, அவர் தீவிர பய உணர்வுகளை அனுபவித்துவந்திருக்கிறார். நிலைமை தன் கட்டுப்பாட்டில் இல்லை என்று உணர்ந்து பயந்திருக்கிறார். அதுபோன்ற நேரங்களில் அவருடைய இதயம் அதிவேகமாகத் துடிக்கும், அந்தச் சத்தம் வெளியிலேயே கேட்டுவிடும், கூண்டுக்குள் அடைபட்ட பறவையொன்றின் சிறகுகள் படபடப்பதுபோல் அவருடைய வயிற்றில் ஓர் உணர்வு ஏற்படும். அவருக்கு அதிகமாக வியர்க்கும், வாய் உலர்ந்துபோகும். இந்தத் தாக்குதல்கள் மாதத்தில் 3-4 முறை நடக்கும், ஒவ்வொருமுறையும் சுமார் பத்து நிமிடங்களுக்கு அதன் தாக்கம் இருக்கும். இதற்கு வெளிப்படையான தூண்டுதல் எதுவும் இருக்காது. யோசித்துப்பார்த்தால், எதனால் அந்தப் பயம் வருகிறது என்று அவருக்கே புரியாது. இதற்காக அவருக்குச் சில மருந்துகள் சிபாரிசு செய்யப்பட்டன. அவை நன்றாகவே வேலை செய்தன. ஆனால், நிரந்தரமான குணம் கிடைக்கவில்லை. அவர் ஓர் உளவியலாளரிடம் அனுப்பப்பட்டார். ஆனால், அதை அவர் சரியாகக் கவனிக்கவில்லை.

உடனடியாக, அவருடைய மருத்துவ வரலாறு ஆராயப்பட்டது, இதேபோல் தோன்றும் வேறு மனநலப் பிரச்னைகள் எவையும் அவருக்கு இல்லை என்பது மதிப்பிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டது. சில உடல்சார்ந்த பிரச்னைகளுக்கும் பயத் தாக்குதல்கள் அறிகுறியாக அமையக்கூடும். அவற்றையும் ஒரு மருத்துவர் ஆராய்ந்தார், அந்தப் பிரச்னைகள் எவையும் இவருக்கு இல்லை என உறுதிசெய்தார்.

சாஷாவின் வயது 24. அவருக்கு அடிக்கடி பயத் தாக்குதல்கள் வரும், உடம்பெல்லாம் நடுங்கும், வயிறு வலிக்கும், படபடக்கும், மூச்சுவிடச் சிரமப்படுவார், கைகள் வியர்த்துக்கொட்டும். இந்தத் தாக்குதல்கள் அனைத்தும், ஒரே ஒரு சூழலில்தான் நடைபெற்றன: அவர் ஒரு விமானத்தில் செல்லவேண்டியிருக்கும்போது. அவருடைய பணி காரணமாக, சாஷா அடிக்கடி விமானத்தில் பயணம் செய்யவேண்டியிருந்தது. இதற்கு ஏதாவது செய்தாகவேண்டும்.

மோனிகாவுக்கு ஏழு வயதானபோது, அவர் இந்தியாவில் ஓர் உறைவிடப்பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அதுவரை, அவர் தன் பெற்றோருடன் வெளிநாட்டில் வசித்துவந்தார். புதிய பள்ளிக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ள அவர் மிகவும் சிரமப்பட்டார். இதனால் அவருக்கு அடிக்கடி பயத் தாக்குதல்கள் ஏற்பட்டன. குறிப்பாக, அந்தப் பள்ளியில் அபூர்வமாக ஆசிரியர்கள் பிள்ளைகளைத் தண்டிப்பது உண்டு. இதை எண்ணி அவர் பயந்தார். பல ஆண்டுகள் கழித்து, இப்போது அதேமாதிரியான பயத் தாக்குதல்களை உணர்கிறார் மோனிகா, அத்துடன், கோபப்பட்டுக் கத்துகிறார், இதற்காக அவர் ஆலோசனை பெற வந்திருந்தார். 'பல நேரங்களில் நான் பதற்றத்துடன் இருக்கிறேன், எளிதில் உணர்ச்சிவயப்பட்டுவிடுகிறேன்' என்றார் அவர். மோனிகாவின் இந்தச் செயல்பாடுகள், அவரது ஆறு வயது மகளைப் பாதித்தன, தான் ஒரு நல்ல பெற்றோராக நடந்துகொள்ளவில்லையோ என்று அவர் உணர்ந்தார்.

ராய்க்கு வயது 30. அவருக்கு அடிக்கடி பயத் தாக்குதல்கள் வந்துகொண்டிருந்ததால், அவருடைய மருத்துவர் அவரை என்னிடம் அனுப்பிவைத்தார். ஏழு வருடங்கள் முன்பாக, ராய்க்கு 23 வயதாகியிருந்தபோது, திடீரென்று ஒருநாள் அவருடைய நெஞ்சிலும் இடத்தோளிலும் வலி ஏற்பட்டது, அவர் பயத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால், அங்கே அவரைப் பரிசோதித்துப்பார்த்தபோது, அவருடைய உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிந்தது. விரைவில், அவர் அமெரிக்காவுக்கு இடம்பெயரவேண்டியிருந்தது. ராய்க்கு நேரந்தவறாமை, எதையும் துல்லியமாகச் செய்தல் ஆகியவை முக்கியம். குறிப்பாக, பொருள்களைச் சுத்தமாக, தூசு இல்லாமல் வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவார். இதனால், அமெரிக்க வாழ்க்கைமுறை அவரிடம் குறைவான பதற்றத்தையே உண்டாக்கியது. அவர் அங்கே இருந்த ஐந்து ஆண்டுகளில், அபூர்வமாகதான் பயத் தாக்குதல்களை உணர்ந்தார். இந்தியா வந்தவுடன், அவருடைய பயத் தாக்குதல்கள் அதிகரித்தன. அதற்காக, மருத்துவரைக் காண வந்தார்.

ஃபெரோஜாவுக்கு வயது 20. அவர் எப்போதும் பதற்றத்துடனே காணப்பட்டார். ஒவ்வொரு நாளும் கல்லூரி சென்று நண்பர்களைச் சந்திக்கவேண்டும் என்று நினைத்தாலே அவருக்குப் பயம் ஏற்பட்டது. காரணம், அந்த நண்பர்கள் அவரை ஏதோ ஒரு காரணம் சொல்லித் தினமும் கேலி செய்துகொண்டிருந்தார்கள்: அவருடைய நோட்டுப்புத்தகங்கள், பாடப்புத்தகங்கள் சுத்தமாக இருந்தால் கேலி, அவருடைய உடைகள் நேர்த்தியாக இருந்தால் கேலி, அவர் எதையும் நேரந்தவறாமல் செய்கிறார் என்றால் கேலி, குழுவினரின் திட்டம் மாறும்போது, அவர் தன் தாயைத் தொடர்புகொண்டு இந்த மாற்றத்தைப்பற்றிச் சொல்லித் தான் தாமதமாக வீட்டுக்கு வருவதாகச் சொன்னால், அதற்கும் கேலி... ஃபெரோஜா எது செய்தாலும் அவருடைய நண்பர்கள் அதைக் கேலி செய்தார்கள். ஃபெரோஜாவுக்கு OCD பிரச்னை இருக்கும் என்று அவர்கள் அவரைத் தொடர்ந்து கேலி செய்தார்கள். இதனால், அவர் அதைப்பற்றிப் படித்தார், தனக்கு OCD இருக்கிறதோ என்று கவலை கொண்டார்.

க்ளாரெவுக்கு வயது 25. ஒரு மாதமாக அவருக்குத் தீவிரப் பதற்றம். இதனால், அவருடைய குடும்ப மருத்துவர் அவரை என்னிடம் அனுப்பிவைத்திருந்தார். ஒரு நாளைக்கு 5-6முறை பயத் தாக்குதல்கள் வருவதாக அவர் சொன்னார், ஒவ்வொரு பயத்தாக்குதலும் பலமணிநேரம் நீடிப்பதாகவும் குறிப்பிட்டார். அவருடைய திருமண வாழ்க்கை நன்றாகவே இருந்தது. ஆனால், அவருடைய மாமனார், மாமியாருக்கு க்ளாரெவைப் பிடிக்கவில்லை. எப்படியாவது தங்கள் மகனை அவருக்கு எதிராகத் திருப்பிவிடவேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்ததாக அவர் சொன்னார், இதனால், தன் கணவர் தன்னை விவாகரத்து செய்துவிடுவாரோ என்ற பயத்துடன் அவர் வாழ்ந்தார். கடந்த சில மாதங்களில், நிலைமை இன்னும் மோசமாகிவிட்டதாகத் தோன்றியது.

அலிஷாவுக்கு வயது 26, அவர் கூச்ச சுபாவம் கொண்டவர், விருந்து நிகழ்ச்சிகளில் அவர் அசௌகர்யமாகவே உணர்வார், குறிப்பாக, புதியவர்களுடன் கலந்து பேசுவதென்றால் அவருக்குப் பிடிக்காது. ஆனால், அவருடைய கணவர் தொடங்கியுள்ள புதிய தொழில் முயற்சிக்கு உதவுவதற்காக, அவர் பல விருந்துகளில் கலந்துகொண்டு பலருடன் பழகவேண்டியிருந்தது. இந்த நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றன, வாரத்துக்கு மூன்று விருந்துகளாவது இருக்கும். விருந்து நடைபெறும் அறைக்குள் நுழைகிற அந்தக் கணத்தில், அவர் மிகுந்த பயத்தை உணர்ந்தார். எல்லாரும் தன்னைப் பார்க்கிறார்கள், தன்னை எடைபோடுகிறார்கள் என்று எண்ணிப் பயந்தார். அதுபோன்ற நேரங்களில் அவரால் சரியாக மூச்சுவிடக்கூட முடியவில்லை, உடல் வியர்த்துக்கொட்டியது, தலைவலி வருவதுபோல் உணர்ந்தார். இந்தப் பிரச்னையைத் தவிர்ப்பதற்காக, விருந்துக்குச் செல்லுமுன் கொஞ்சம் குடித்துவிட்டுச் செல்ல முயன்றார் அவர்.

இவர்கள் எல்லாரையும் ஆராய்ந்துபார்த்தபோது, அமித்துக்குமட்டும்தான் பயக் குறைபாடு இருப்பது தெரியவந்தது. மற்றவர்களுக்கு வந்திருக்கும் கூடுதல் அறிகுறிகளால், அவர்கள் வெவ்வேறு வகைபாடுகளில் பொருந்தினார்கள். அவர்கள் எல்லாருக்கும் பயத் தாக்குதல் இருந்தபோதும், அது பயக் குறைபாடாக இல்லை. உதாரணமாக, ராய்க்கு OCD வகைப் பிரச்னையொன்று இருந்தது, சாஷாவுக்கு அவியோஃபோபிக் பிரச்னை, ஃபெரோஜாவின் அறிகுறிகளைக்கொண்டு அவருக்கு என்ன பிரச்னை என்பதை உறுதியாகக் கண்டறிய இயலவில்லை, அவருடைய மனோநிலையில் ஏதோ அசௌகர்யம் இருப்பதைமட்டும்தான் கண்டறிய இயன்றது, அலிஷாவுக்குச் சமூகப் பதற்றப் பிரச்னை இருந்தது.

முடக்கிப்போடும் பயம் திடீரென்று ஏற்பட்டால், அதற்குக் காரணம் எதுவாக இருந்தாலும் சரி, அதனால் தீவிர உடல் மற்றும் மன அழுத்தம் ஏற்படக்கூடும். அதனால் மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழ இயலாமல் சிரமப்படக்கூடும்.

ஒருமுறை அமித் தன் அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவருக்குப் பயத் தாக்குதல் ஏற்பட்டது. அங்குமிங்கும் வண்டிகள் விரைந்து சென்றுகொண்டிருக்கிற சாலையில் காரை அப்படியே நிறுத்திவிட்டார். அதன்பிறகு, போக்குவரத்துக் காவலர்கள் வந்து அவருடைய காரை மீட்டார்கள், அவரை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்கள்.

சாஷா பலமுறை விமானநிலையம்வரை சென்று, பாதுகாப்புப் பரிசோதனைக்கு முன்னால் அங்கிருந்து திரும்பிவந்துவிட்டார். இதனால் அவர் தன்னுடைய தொழிலை மேம்படுத்துவதற்கான பல வாய்ப்புகளைப் பறிகொடுத்தார்.

மோனிகாவின் தீவிரப் பதற்றம் கோபமாக வெளிப்பட்டது. இதனால் அவர் நண்பர்களை இழந்தார். அவர் பல நேரங்களில் தன் மகளையும் அடித்துக்கொண்டிருந்தார்.

ராய்க்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது, இளம் வயதில் அவர் உயர் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகளைச் சாப்பிடவேண்டியிருந்தது.

ஃபெரோஜாவுக்கு மனநலப் பிரச்னைகள் எவையும் இல்லை, தேவையில்லாத கவலைகளால் அவர் சோகமாகிப் பயந்துகொண்டிருந்தார்.

க்ளாரெ எதிர்மறைச் சூழ்நிலைகளைக் கற்பனை செய்துகொண்டு பயந்தார், மனச்சோர்வு அடைந்தார்.

அலிஷா விருந்துகளைச் சமாளிப்பதற்காக நிறையக் குடிக்க ஆரம்பித்தார். அதனால் இரண்டுமுறை மயங்கி விழுந்துவிட்டார்.

ஒருவர் முதன்முறையாகப் பயத் தாக்குதலை உணரும்போது, பொதுவாக அவர் தன்னுடைய நண்பர் அல்லது குடும்ப உறவினர் ஒருவரிடம் அதைப்பற்றிப் பேசுகிறார். ஆச்சர்யமான விஷயம், இவர்களில் பலரிடம் பதற்றத்தைக் குறைக்கும் மருந்துகள் ஏற்கெனவே இருக்கின்றன, இவர்களுக்கு முன்பு ஏதோ பிரச்னை வந்தபோது அந்த மருந்துகளை ஒரு மருத்துவர் சிபாரிசு செய்திருப்பார். இப்போது, அதே மருந்துகளை அவர்கள் தங்கள் நண்பர்/குடும்ப உறுப்பினருக்குத் தருகிறார்கள். அந்த மருந்துகள் வேலை செய்கின்றன. இதனால், அவர் அதே மருந்துகளை வாங்கிவைத்துக்கொள்கிறார், தேவைப்படும்போதெல்லாம் சாப்பிடுகிறார்.

ஆனால், பதற்றத்தைக்குறைக்கும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தக்கூடாது. இப்படி நினைத்தபோதெல்லாம் தாங்களே மருந்துகளைச் சாப்பிட்டுவந்தால், அவர்கள் அதற்கு அடிமையாகிவிடக்கூடும், அதிக அளவில் மருந்துகளைச் சாப்பிட்டால்மட்டுமே இயல்பாக இருக்க இயலும் என்கிற நிலைமைக்குக்கூட அவர்கள் வந்துவிடக்கூடும். என் மருத்துவ அனுபவத்தில் இப்படிப்பட்டவர்களைப் பார்த்துள்ளேன். இவர்களுக்கு என்ன பிரச்னை என்பது எப்போதும் கண்டறியப்படுவதில்லை, காரணம், இவர்கள் ஒரு மன நல நிபுணரை அணுகுவதே இல்லை. இந்த மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் பெறுவது சிரமம். ஆகவே, ஒருவேளை மருந்து கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்திலேயே இவர்கள் இருப்பார்கள். அப்படி ஒருவேளை மருந்து கிடைக்காவிட்டால், இவர்களுக்குத் தீவிர விலகல் அறிகுறிகள் ஏற்படலாம். உதாரணமாக, தலைவலி, வாந்தி, மங்கலான பார்வை, தசை வலி, நடுக்கம், பதற்றம் அதிகரித்தல் போன்ற துயர அறிகுறிகள், வலிப்பு, ஏன், மரணம்கூட. இவர்களுக்கு இதைப்பற்றித் தெரிந்திருப்பதில்லை.

விளக்கமுடியாதவகையில் பயத் தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்ந்தால், ஒரு மன நல நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். ஒரு மனநல நிபுணர் அல்லது உளவியலாளர் நிலைமையை ஆராய்ந்து, அதன் பின்னணியில் இருக்கக்கூடிய பிரச்னையைக் கண்டறிவார், அதற்கேற்பச் சிகிச்சை வழங்குவார். பயத் தாக்குதல்களைத் தானே ஆராய்வதும் சிகிச்சை வழங்கிக்கொள்வதும் தவறு. அப்படிச்செய்தால், காய்ச்சலை ஒரு நோயாகக் கருதிச் சிகிச்சை வழங்குவதற்குச் சமமாகிவிடும். காய்ச்சல் என்பது இன்னொரு பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம் என்பதே மருத்துவத்தின் அடிப்படை, அது மலேரியா, டெங்கு, மெனிங்கிடிஸ் அல்லது வேறு தொற்றாக இருந்துவிட்டால்? உரிய மருத்துவ சிகிச்சை தந்து குணப்படுத்தவேண்டுமல்லவா? அதுபோல்தான் பயத் தாக்குதல்களையும் அணுகவேண்டும்.

டாக்டர் ஷ்யாமளா வட்ஸா பெங்களூரைச் சேர்ந்த மனநல நிபுணர், இருபது ஆண்டுகளுக்குமேலாக இத்துறையில் இயங்கிவருகிறார். உங்களுக்கு ஏதேனும் கருத்துகள் அல்லது கேள்விகள் இருந்தால், columns@whiteswanfoundation.org என்ற முகவரியில் அவருக்கு எழுதலாம்

We are a not-for-profit organization that relies on donations to deliver knowledge solutions in mental health. We urge you to donate to White Swan Foundation. Your donation, however small, will enable us to further enhance the richness of our portal and serve many more people. Please click here to support us.

White Swan Foundation
www.whiteswanfoundation.org